செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

வடக்கு முதலமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றும் சதிமுயற்சிக்கு துணைபோகும் ஒரு தமிழ்க் கும்பல்!

Posted: 2014-06-11 08:52:42 | Last Updated: 2014-06-11 08:55:01
வடக்கு முதலமைச்சரை பதவியிலிருந்து  வெளியேற்றும் சதிமுயற்சிக்கு  துணைபோகும் ஒரு தமிழ்க் கும்பல்!

வடக்கு முதலமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றும் சதிமுயற்சிக்கு துணைபோகும் ஒரு தமிழ்க் கும்பல்!

எமது 'மலரும்' இணையத்தில் கம்பவாரிதி ஆரம்பித்து வைத்த 'சர்ச்சைக் களம்' வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளை அல்லது செயல் திறனின்மையை கடுமையாக விமர்சித்திருந்தது.

அதையொட்டி கடந்த சனிக்கிழமை 'தினக்குரல்' பத்திரிகை தனது வார இறுதி அரசியல் இணைப்பான 'புதிய பண்பாடு' பிரிவின் முதல் பக்கத்தில் 'வடக்கு முதலமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றும் சதிமுயற்சிக்கு துணைபோகும் ஒரு தமிழ்க் கும்பல்' என்ற மிகப் பெரிய தலைப்புகளோடு ஒரு விமர்சனத்தைப் பிரசுரித்து புதிய ஊடகப் பண்பாடு ஒன்றை ஆரம்பித்து வைத்திருக்கின்றது.

'மலரும்' இணைய சர்ச்சைக் களத்தில் முதலமைச்சரின் செயற்பாடு குறித்து விமர்சிக்கப்பட்ட விடயங்களை ஆராய்வதை விடுத்து, மூலக் கட்டுரையை வரைந்த கம்பவாரிதி இ.ஜெயராஜையும் அதனைப் பிரசுரித்த 'மலரும்' இணையளத்தையும் கடுமையாக விமர்சிக்கும் 'புதிய பண்பாடு' ஆரம்பமாகியிருக்கின்றது.

அரசுத் தரப்பினால் இறக்கப்பட்ட தமிழ்க்கும்பல் ஒன்றுக்கு உதவியாக அரசுத் தரப்பினாலேயே நிறைய தமிழ் இணையத் தளங்கள் 'மலரச் செய்யப்பட்டுள்ளன' என்ற குறிப்பும் இந்த 'ஆழமான' (?) கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றது. விடயத்தை நேரடியாகச் சுட்டுவதற்குத் திராணியற்ற 'சண்முகவடிவேல்' என்ற இந்தக் கட்டுரையாளர் 'கிசு கிசு' எழுதுவது போன்ற பாணியில் 'மலரும்' இணையத்தை அரசின் கூலிப்படையாகக் காட்ட முல்கின்றார். அதைக் கூட வெளிப்படையாகக் கூற முதுகெலும்பு இல்லாமல் வரிகளுக்கு இடையில் கோடி காட்ட முயல்கின்றார்.

'மலரும்' இணையத்தை அரசின் ஊதுகுழல் போல காட்ட முயலும் எத்தனத்துக்கு 'தினக்குரல்' இத்துணை முக்கியத்துவம் கொடுத்திருப்பது ஆச்சரியத்துக்குரியது. 'நீயுமா புரூட்டஸ்? என்று கேள்வி எழுப்புவதைத் தவிர, வேறு வழியில்லை.

எது, எப்படியோ 'மலரும்' இணையம் ஆரம்பித்த 'சர்ச்சைக் களம்' ஏதோ ஒரு வகையில் சர்ச்சையைத் திறந்து விட்டிருப்பது உண்மை. அது ஒரு மூத்த பத்திரிகை நிறுவனத்தின் ஊடகப் போக்குத் தொடர்பில் 'புதிய பண்பாட்டை' வெளிப்படுத்தியிருப்பதுதான் எமக்கு ஆச்சரியம்.

'மலரும் இணைய வாசகர்களுக்காக அந்தக் கட்டுரையை அப்படியே எந்த மாற்றமும் இன்றி - வார்த்தைக்கு வார்த்தை - இங்கு பிரசுரிக்கின்றோம். சர்ச்சையின் முடிவில் 'மலரும்' இணையத்தின் விளக்கமான பதில் பிரசுரமாகும். - ஆசிரியர்.

தினக்குரலில் பிரசுரமான கட்டுரை இதுதான்:-

வடக்கு முதலமைச்சர் மீது கடந்த சில மாதங்களாக மிக மோசமான அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சில ஊடகப்பிரிவினர் அதிக குற்றச்சாட்டை மேற்கொண்டு வருகின்றனர். இது இரண்டு பிரதான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று முதலமைச்சரின் இயல்பினை புரிந்துகொண்டு அவரிடமிருந்து தமிழ் மக்கள் பெற வேண்டியதை பெறமுடியாதவர்களாக உள்ளனரா? அல்லது தமிழ் மக்களின் இயல்புக்கு இசைய முடியாது தன்னை மாற்றிக்கொள்ள முடியாது முதலமைச்சர் தத்தளிக்கின்றாரா? என்பதேயாகும். இந்தக் கட்டுரையும் ஏறக்குறைய இவ்விரண்டு பக்கங்களையும் அலசுவதன் மூலம் முதலமைச்சர் மீதான அவதூறுகளின் உண்மைகளை கோடிட்டுக் காட்ட முயலுகிறது.

வடக்கு முதலமைச்சர் மீது இலங்கை ஆளும் தரப்பும் பௌத்த தீவிரவாத சக்திகளும் எதிர்த்தரப்பும் பாரிய எதிர்ப்புப் பிரசாரத்தை வடக்குத் தேர்தலுக்குப் பின் கட்டவிழ்த்து விட்டிருந்தன. இது சற்று ஓய்ந்துள்ள நிலையில் தமிழ்த் தரப்பு எனக் கூறிக்கொண்ட சில ஊடகப் பிரிவினர் அவரைத் தாக்குவதே குறியாகக் கொண்டு செயல்படுகின்றனர். இவர்கள் தமிழ் மக்களினதும் தமிழ்த் தேசியத்தினதும் காவலர்கள் தாம் என்றே வெளிப்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்களின் போராட்டத்தில் இப்போது இவர்களுடன் வடக்கு முதலமைச்சரை இரண்டு வாரத்தில் வீட்டுக்கு அனுப்புவதாக முடிவெடுத்து கம்பன் புகழ்பாடும் ஆன்மீகவாதியும் கைகோர்த்துள்ளார்.

இவர்களின் சார்பாக இயங்கும் இலத்திரனியல் பிரிவும் அச்சு ஊடகப் பிரிவும் மாறிமாறி வடக்கு முதலமைச்சர் மீது சேற்றை வாரி இறைத்துக்கொண்டே வருகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் ஓர் ஆன்மீகவாதி, தாம் வடக்கு முதலமைச்சரை வேட்பாளராக நிறுத்தியபோது அவரை வரவேற்றதுடன் 'புனைபெயரில்' இதே பத்திரிகையில் அவருக்கு கட்டுரை எழுதியதாகவும் அவர் இப்போது மனம்நொந்து அவருக்கு எதிராக இலத்திரனியல் ஊடகத்தில் பதில் கொடுத்துமுள்ளார். இதனை, முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் கொண்டிருந்த ஒருவர் தனது இலத்திரனியல் ஊடகத்தின் பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார். ஆனால் சிலர், புனைபெயர் ஆன்மீகவாதியை அணுகி ஏன் இந்த முடிவுக்கு வந்தீர்கள் எனக் கேட்டபோது, தாம் முதலமைச்சரை பல தடவை பல நிகழ்வுக்கு அழைத்த போதும் அவர் எந்த அழைப்புக்கும் சமூகம் தராது மறுத்ததனால் அவர் ஒரு சரியான முதலமைச்சராக இருக்க முடியாதெனக் கூறியுள்ளார். இதனாலேயே அவர் மீது புனைபெயர் ஆன்மீகவாதி வெறுப்படைந்துள்ளார் என அவரின் நண்பர் ஒருவர் கூறினார். இதில் இரண்டு விடயம் அருவருப்பானது.

ஒன்று புனைபெயரில் நான்தான் எழுதினேன் என்று குறிப்பிடுபவர் ஏன் தனது சொந்தப் பெயரில் அப்போது எழுதாதது என்பதாகும். மேலும் அது யாராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அவர் ஓர் ஆன்மீகவாதி இதை செய்துள்ளார் என்பதுதான் ஏக்கமாகவும் கேவலமாகவும் உள்ளது. இரண்டாவது புனைபெயரின் பத்திரிகை தர்மம் எது என்பது அதை இணையத்தில் வரச்செய்த அந்த மூத்த பத்திரிகையாளருக்கும் தமிழ்த் தேசியம் பேசும் சகபாடிக்கும் தெரியாததொன்றாக இருக்க முடியாது. அப்படியாயின் இவர்கள் எதை செய்ய முயற்சிக்கிறார்கள். புனைபெயர் ஆன்மீகவாதி தனது சுய இலாபத்திற்காக புனைபெயரில் எழுதியவர், அரசின் தேவைக்காகவும் தனது எதிர்கால நலனுக்காகவும் அதனை இப்போது அம்பலப்படுத்தியுள்ளார்.

அத்துடன் இணையத்தளத்தில் தகவலை வெளியிட முன்பு ஆளும் தரப்பிலுள்ள சில முக்கியஸ்தர்களிடம் இதனைக் காட்டி அவர்களது வழிப்படுத்தலில் இது வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது. இதில் குறிப்பிட்டிருப்பது என்ன என்பதை நோக்குவது அவசியமானது. முதலமைச்சர் மாகாணசபை நிர்வாகத்தை செய்யமுடியாவிட்டால் ஏன் தொடர்ந்து பதவியிலிருக்கிறீர்கள், வெளியேறுங்கள், இதுவே அவரது குற்றச்சாட்டு. மாகாணசபை நிர்வாகத்தை செய்ய முடியாதென்பது இலங்கையிலுள்ள எந்த மனிதனுக்கும் தெரியாததொன்றாக இருக்க முடியாது. அதில் வடக்கு, கிழக்கில் எதையும் செய்ய முடியாததென்பது உலகத்திற்கே தெரிந்த விடயம். இது புனைபெயர் ஆன்மீகவாதிக்கு தெரியவில்லை என்பது பிச்சைக்காரன் சத்தி எடுத்த கதைதான்.

இந்த ஆன்மீகவாதி கொழும்பில் அண்மைக் காலத்தில் 'தமிழர்களின் தலைவர்' என வடக்கைச் சேர்ந்த அமைச்சரை வீழ்ந்து வணங்கி புகழாராம் சூட்டினார். தமக்கு கோவில் கட்ட பணம் கொடுத்ததற்காக. இப்போது கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் ஒரு அமைப்பின் (மேன்மை தங்கியவரின் புதல்வனின் நெருங்கிய நண்பனின் அமைப்பு) அங்குரார்ப்பணம் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு புகழ்பாடியுள்ளார். அந்த அமைப்பு எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த புனைபெயர் ஆன்மீகவாதி வடக்கு, கிழக்கில் தான் வாழ்ந்து வந்ததாகவும் இப்போதும் தமிழ்மக்களுடன் ஒன்றித்திருப்பதாகவும் சொல்கிறார். ஆனால் அவர் தமிழ் மக்களுக்கு என்ன நடந்ததென்பதை உலகத்திற்கு வெளிப்படுத்த என்ன செய்தார் என்பது தெரியவில்லை. தமிழ் பெண்கள் ஆயிரக்கணக்கில் கற்பழிக்கப்பட்ட போதும் மௌனித்து வாழ்ந்த இந்த புனைபெயர் ஆன்மீகவாதி, இப்போது மட்டும் புனைவு கதை விடுகிறார். தமிழ் பெண்களின் கற்பு பறிபோவதைப் பற்றி பேச முடியாத புனைபெயர் ஆன்மீகவாதி, ஒவ்வொருவருடமும் சீதையின் கற்புப் பற்றி தான் பேசுவது மட்டுமன்றி பிற ஆன்மீகவாதிகளையும் அழைத்து வந்து கற்பு என்ற வார்த்தைக்கு தர நிர்ணயம் செய்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவர் எப்படி தமிழ் மக்களைப் பற்றி, உண்மையான புனிதமான மனிதனைப் பற்றி வசைபாடமுடியும். இந்த தரப்புக்கள் அரசின் ஆலோசனை சார்ந்தே செயல்படுகின்றன.

அரச தரப்பு முதலமைச்சரை பதவியிலிருந்து துரத்தப் போட்ட திட்டங்கள் தவிடு பொடியாகிவிட்டதால் புதிய தமிழ்க் கும்பல் ஒன்றை தற்போது இறக்கியுள்ளது. அதற்கு உதவியாக நிறைய தமிழ் இணையத்தளங்களை அரச தரப்பினர் மலரச் செய்துள்ளனர். இவர்கள் முதலமைச்சரை விரட்டிவிட்டு தமது சுய இலாபங்களை அனுபவிக்க தரை இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழ் தேசியம் பேசிக்கொள்ளும் அதிதீவிரவாதிகள் காலப்போக்கில் தமிழ்த் தேசியத்தை விலைபேசி விற்றுவிட்டு பணத்தை சுவிஸ் அல்லது வெளியாட்டு வங்கிகளில் வைப்பிலிட்டு தமது கூட்டத்தை வளர்த்துக்கொள்வார்கள். இதற்காக தரையிறக்கம் செய்யப்பட்ட கும்பலுடன் கைகோர்த்துள்ள பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களில் சிலரும் சில ஊடகப்பிரிவினரும் தமிழ்த் தேசியத்தின் உறுப்பினர்களும் அரசியலே என்னவென்று தெரியாதவர்களும் சேர்ந்துள்ளமை கவலை தருகிறது.

முதலமைச்சரைப் பொறுத்தவரை அவர் அரசியலில் ஏமாற்றுவித்தை செய்யத் தெரியாதவர். வெளிப்படைத் தன்மை மிக்கவர், உண்மையை உலகுக்கு தெரியப்படுத்துபவர். இவர் நிலை தமிழ் மக்களுக்கு அவசியமானது. சர்வதேசத்தை கையாளும் விதத்தில் இவரது வெளிப்படைத் தன்மை சிறப்பான விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஏற்க முடியாத ஆளும் தரப்பு அவரை எதிர்கொள்ள புதிய வழிமுறையை ஆரம்பித்துள்ளது. இதனை முறியடிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உண்டு. தமிழ் மக்கள் முதலமைச்சரைப் பாதுகாக்க மீண்டும் ஒருதடவை வீதிக்கு வர தயங்கமாட்டார்கள். முதலமைச்சரின் நிர்வாகத்தில் குறைபாடுகள் உண்டுதான். எந்தநாட்டு நிர்வாகத்தில் குறைபாடில்லை. அதுமட்டுமல்ல, வடக்கில் எந்தப் பணியையும் இராணுவத்தினதும் ஆளும் தரப்பினதும் அனுமதிபெறாது செயல்படுத்த முடியாது. இதனால் முதலமைச்சரை குறைகூறுபவர்கள் முதலில் 13ஆம் திருத்தத்தைப் படித்துவிட்டு அதனை புரிந்துவிட்டு பின்னர் குறை எங்குள்ளதென்பதை வெளிப்படுத்துங்கள்.

இப்படி ஒரு மனிதனை இனி தமிழன் சந்திக்க முடியாது. முப்பது வருடத்தை அடுத்து மீண்டும் ஒரு தலைமை தமிழருக்கு கிடைத்துள்ளது. அதனையும் நாசம் செய்துவிடாதீர்கள். மீறினால் மக்களிடம் பதில் உண்டு. ஊடகங்கள் எப்போதும் உண்மையை கண்டறிவதற்காக செயல்பட வேண்டும். தமிழ்த் தேசியம் இப்போது ஒரு வியாபாரப் பொருள். அதனை யார் வேண்டுமானாலும் கையாளலாம். முதலமைச்சர் அலுவலகம் ஊடகத்தினருக்கு மட்டுமுரியதல்ல. ஊடகம் ஒரு பங்கே தவிர அது முழுமையாக முதலமைச்சரையும் கையாள முடியாது. எனவே இந்த இழுபறியில் உள்ள குழப்பம் அரசுக்கும் வடக்குக்குமான மோதலாகும். அரசு ஆரம்பித்துள்ள குழப்பத்தை எல்லோரும் இணைந்து முறியடிப்பது அவசியமானது.

- சண்முகவடிவேல்.

நன்றி : 'தினக்குரல்', - புதிய பண்பாடு (வார இறுதி அரசியல் இணைப்பு)

07.06.2014