செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

பலவித கனவுகளுடனேயே நீதியரசரை முதலமைச்சராக்கினர் தமிழ் மக்கள்!

Posted: 2014-06-20 05:40:54
பலவித கனவுகளுடனேயே நீதியரசரை முதலமைச்சராக்கினர் தமிழ் மக்கள்!

பலவித கனவுகளுடனேயே நீதியரசரை முதலமைச்சராக்கினர் தமிழ் மக்கள்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயலாற்றல் குறித்து 'மலரும்' இணையத்தின் சர்ச்சைக் களத்தில் வரையப்பட்ட கட்டுரைகளை ஒட்டி நடராஜா ஐங்கரன் என்பவர் எழுதிய கடிதம் இது. இதில் உள்ள ஆக்கபூர்வமான அம்சங்கள் நோக்கத்தக்கவை. -ஆசிரியர்

பலவித கனவுகளுடனேயே நீதியரசரை முதலமைச்சராக்கினர் தமிழ் மக்கள்!

வட மாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரனுக்கு, கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் எழுதிய பகிரங்க மடல் காலத்தின் தேவை கருதியதொன்றாகவே கருதப்பட வேண்டியதாகும்.

அண்மையில் (05.06.2014) மண்டைதீவில் இடம்பெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்கள் அங்கு உரையாற்றும் போது "விடுதலைப் புலிகள் தமது போரட்டத்தை நோ்த்தியாக நடாத்திய போதும் பல்வேறு தவறுகளை தமது காலத்தில் செய்திருக்கிறார்கள். அவர்கள் விட்ட தவறுகளை அன்றைய கால தமிழினப் புத்திஜீவிகள் உரிய முறையில் எடுத்துக் கூறி அவர்களை வழிப்படுத்தியிருந்தால் பின்னாளில் போரட்டத்திற்கு ஏற்பட்ட பாதக நிலை வந்திருக்காது. தற்போது மாகாண சபையிலும் அப்படியான தவறுகள் இருக்கின்றன போலத் தெரிகிறது. அதனை மக்களாகிய நீங்கள் தட்டிக்கேட்டு வழிப்படுத்த வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்

எனவே மாகாண சபையின் முக்கிய அமைச்சு ஒன்றின் அமைச்சரது கூற்றையும், அண்மைக் காலத்தில் ஊடகங்களில் தமிழ்த்தேசிய அரசியல் தொடர்பாக வந்து கொண்டிருக்கும் விமர்சனங்களையும் மற்றும் நடைமுறையில் தற்போதைய தமிழினத் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் செய்து கொண்டிருக்கும் செயற்பாடுகளையும் பார்க்கும் போது திரு.இ.ஜெயராஜ் போன்றவர்களது நேரடியான கேள்விக் கணைகள் தேவையானவையே.

ஆனால், வட மாகாண முதலமைச்சர் தொடர்பான நிலையைப் பொறுத்தவரை அவர் அரசியலை அத்துப்படியாக அறிந்து கொண்டவராகவும், சட்ட மற்றும் சமூக அணுகுமுறை தொடர்பில் பாண்டித்தியம் பெற்றவராகவும் உள்ள போதும் அரசியலை அரசியல்வாதிகளோடு சேர்ந்து நடைமுறைப்படுத்துதல் என்ற நிலையில் அனுபவம் அற்றவராக இருந்துள்ளார் என்பது தெளிவான உண்மை. இந்நிலையில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் புதுமுகமாக அரசியலாளராக நுழைந்த அவரால் ஏற்கனவே உள்ள தமிழ் அரசியல் விற்பன்னர்களை புரிந்துகொள்ளவே கடந்த எட்டு மாதங்களும் போதாமல் இருந்திருக்கலாம்,

ஆனாலும் கம்பவாரிதி அவர்கள் குறிப்பிட்டமை போல தமிழ் மக்கள் தம் மீது எந்தளவு நம்பிக்கையையும், எதிர்பார்ப்புக்களையும் வைத்துள்ளார்கள் என்பதை அவருக்கு கிடைத்த விருப்பு வாக்குகளைக் கொண்டு அவர் அறிந்திருக்கலாம், அந்த மக்களது நம்பிக்கை பிற்காலத்தில் ஆட்டம் கண்ட நிலையை அடைந்திருப்பது என்பது மறுக்க முடியாத உண்மையே.

ஆனால், இந்த இடத்தில் மக்கள் நீதியரசர் தேர்தல் காலத்தில் பேசிய வீர வசனங்களுக்கும் உணர்வு ஊட்டப்பட்ட வார்த்தைகளுக்கும் மயங்கியே ஒன்று திரண்டு வாக்களித்தார்கள் என்ற கம்பவாரிதியின் கூற்றை மறுக்க வேண்டிய நிலை இருக்கின்றது. ஏனெனில் கடந்த காலத்து உணர்ச்சி ஊட்டப்பட்ட வார்த்தை ஜாலங்களை நம்பி தமது உடமைகள், உறவுகள் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியான மக்கள், போரட்டங்களில் நம்பிக்கை அற்றவர்களாக இருந்த நிலையிலேயே வட மாகாண சபை தேர்த்தல் நடாத்தப்பட்டது. அந்தத் தேர்தலில் போட்டியிட்டவர்களின் வார்த்தைகளை விட, தமிழினத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்காது எமக்கென்றொரு தலைமையை ஒருமித்த நிலையில் தெரிவு செய்வோம், அதன் மூலம் அமைதியான அரசியல் தீர்வொன்றினைப் பெறுவோம் என்ற இறுதி ஆசையோடே மக்கள் வாக்களித்தார்கள். ஒரு சில இடங்களில் நீதியரசரது உருவ அமைப்பை பார்த்து எம்மை மீட்க வந்த மீ்ட்பர் என தெய்வ நிலையிலும் மக்கள் நேசித்தார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இவை தவிர, நல்லதொரு மதிப்பு மிக்க பதவியில் இருந்தவர். எனவே பதவிக்கும் கதிரைக்கும் ஆசைப்படமாட்டார், மக்களது உண்வுகளுக்கே மதிப்பளிப்பார். பதவியில் இருந்த காலத்திலே கிடைத்த வசதி வாய்ப்புக்களை துஷ்பிரயோகம் செய்யாது, பந்தா காட்டாது வாழ்ந்தவர். எனவே சலுகைகளுக்கு அடிபணிய மாட்டார். குடும்ப வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் தன்னிறைவு கண்டவர். எனவே சமுதாய நோக்கில் அக்கறையோடு செயற்படுவார். இனவாதத்தை போக்கவல்ல இன உறவு கொண்டவர். எனவே அதனை தமிழர் அரசியலுக்கு சாதகமாக்கி நல்ல விளைவொன்றை பெற்றுக்கொடுப்பார் - என்கின்ற பலவகை கனவுகளோடுமே நீதியரசரது தெரிவை மக்கள் ஏற்றுக்கொண்டனார்

ஆனால் "எதிர்பார்ப்புக்கள் எங்கு இருக்கின்றனவோ அங்கு தான் ஏமாற்றங்கள் உருவாகும்” என்பது போல தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்பினை நீதியரசர் மீது கொண்டதுதான் தவறா அல்லது கம்பவாரிதி அவர்கள் குறிப்பிட்டமை போல எதிரணி மீது குற்றத்தை சுமத்தி விட்டு 'தடை விலகும் போது நடைகொள்வோம்' என்று இருக்கிறாரா என்பதே பெரும் வினாவாகத் தொக்கி நிற்கிறது.

எது, எப்படியோ விரக்தியோடு வாழும் தமிழ்மக்களது எதிர்பார்ப்புக்களை நிவர்த்திக்க வேண்டிய பொறுப்பில் இருந்து முதலமைச்சர் தவறுவாராக இருந்தாலும் சரி, நழுவுவாராக இருந்தாலும் சரி, அது வரலாற்று தூரோகமாகவே முடியும் என்பது அவரும் அறிந்த உண்மை. காலங்கடந்த அறிவுரைகளைப் பெறுவதை விட காலத்தே வரும் விமர்சனங்களை சீர்தூக்கிப் பார்த்து நாதியற்றுப் போயிருக்கும் தமிழினத்தின் தேவையறிந்து செயற்பட வேண்டும் என்பதே தமிழ் பேசும் மக்களது எதிர்பார்ப்பு. முடிந்தால் முயன்று பார்க்கட்டும்; முடியாவிட்டால் காரணங்களை தெளிவுபடுத்தி வெளியேறிப் பார்க்கட்டும்.

- நடராஜா ஐங்கரன்