செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

கண்களால் ஜாலம் செய்த நகைச்சுவை நாயகன் டி.ஆர்.ராமச்சந்திரன்!

Posted: 2014-09-02 02:36:33 | Last Updated: 2014-09-02 02:39:56
கண்களால் ஜாலம் செய்த நகைச்சுவை  நாயகன் டி.ஆர்.ராமச்சந்திரன்!

கண்களால் ஜாலம் செய்த நகைச்சுவை நாயகன் டி.ஆர்.ராமச்சந்திரன்!

ஆண் நடிகர்கள் பெரும்பாலும் கண்களால் கவர முடிவதில்லை. ஆனால் டி.ஆர்.ராமச்சந்திரன் தனது முட்டைக்கண்களை அழகாக உருட்டி அபிநயங்கள் காட்டியதில் பெண் ரசிகளைகளே மிகவும் கவரப்பட்டார்கள்.

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது ஏ.வி.எம் பட நிறுவனம் காரைக்குடியில் தயாரித்த 'நந்தகுமார்' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான டி.ஆர். ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கு இணையான வசூல் மன்னாக விளங்கிய நகைச்சுவை நாயகன். இவருடன் பல முன்னணிக் கதாநாயகிகள் நடித்தது மட்டுமல்ல, இவரிடம் காதலையும் அந்தக் காலத்தில் வெளிபடுத்தியிருக்கிறார்கள். அந்தக்கால பணக்காரக் குடும்ப இளைஞர்களின் சொம்பேறிதனம் - முட்டாள்தனம், ரோமியோத்தனம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக டி.ஆர். ராமச்சந்திரன் இருந்தார். அவரது திரைப் பயணத்தில் ஒரு ப்ளாஷ்பேக் ரவுண்ட் போய்வரலாம் வாருங்கள்.

டி.ஆர்.ராமச்சந்திரனின் சொந்த ஊர் கரூர். அருகேயுள்ள திருக்காம்புலியூர் என்ற சின்ன கிராமம். அங்கு 1917 ஜனவரி மாதம் பிறந்தார். தந்தை பெயர் ரங்காராவ். தாயார் ரங்கம்மாள். சிறு வயதிலேயே தாயை இழந்தார் ராமச்சந்திரன். தந்தை மறுமணம் செய்து கொண்டார். எனினும், மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார்.

IMAGE_ALT

ஐந்தாவது வயதில், குளித்தலையில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார் ராமச்சந்திரன். படிப்பில் ஆர்வம் இல்லை. இதனால் ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டாண்டுகள் இருக்க நேரிட்டது.

தந்தையின் நண்பர் ராகவேந்திரராவ், நாடகங்களுக்கு ஹார்மோனியம் வாசிப்பவர். அவருடைய அனுபவங்களை கேட்ட ராமச்சந்திரனுக்கு, நாடகத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தார். அவர் தடை சொல்லவில்லை. மதுரையில் ஜகந்நாத அய்யர் நடத்தி வந்த பிரபல நாடகக் கம்பெனியான ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா‘வில் நடிகராகச் சேர்ந்தார் ராமச்சந்திரன். சாப்பாட்டுடன் மாத சம்பளம் மூன்று ரூபாய். பிறகு அது 15 ரூபாயாக உயர்ந்தது.

ஆரம்பத்தில் அவருக்குக் கிடைத்தது தோழி வேடம். இந்தக் காலக்கட்டத்தில், இந்த நாடகக் கம்பெனியில் நடிகராக இருந்தவர், எஸ்.வி.வெங்கட்ராமன். (இவர் பின்னர் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘மீரா’ உள்பட பல சிறந்த படங்களுக்கு இசை அமைத்தவர்.) எஸ்.வி.வெங்கடராமன் புதிதாக ஒரு நாடக கம்பெனி தொடங்கினார். அந்த நாடகக் கம்பெனியில் ராமச்சந்திரன் சேர்ந்தார். இந்த சமயத்தில் ஏவி.மெய்யப்ப செட்டியாரை பங்குதாரராகக் கொண்ட பிரகதி பிக்சர்ஸ் பட நிறுவனம் ‘நந்தகுமார்’ என்ற படத்தை தயாரித்தது. அதில் நடிப்பதற்காக, எஸ்.வி.வெங்கட்ராமனின் நாடகக் கம்பெனியில் இருந்த நடிகர்கள் அனைவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

நந்தகுமாரில் கதாநாயகனாக டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். அவருக்கு தோழனாக டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்தார். நந்தகுமாரின் வெற்றியைத் தொடர்ந்து, 1940-ல் ‘போலிப் பாஞ்சாலி’ என்ற படத்தை பிரகதி தயாரித்தது. அதிலும் டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்தது. 1941-ல், பிரகதிக்காக மெய்யப்ப செட்டியார் தயாரித்த படம் ‘சபாபதி.’ முழு நீள நகைச்சுவைப் படம். இதில் கதாநாயகனாக டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்தார். மற்றும் காளி என்.ரத்தினம், சாரங்கபாணி ஆகியோரும் நடித்தனர். பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய கதை இது. படம் மிகச்சிறப்பாக அமைந்து, சக்கை போடுபோட்டது. டி.ஆர்.ராமச்சந்திரன் பெரும் புகழ் பெற்றார்.

பின்னர் திருவள்ளுவர், பஞ்சாமிர்தம், தேவகன்யா, திவான்பகதூர் முதலான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். 1945-ல், ஏவி.மெய்யப்ப செட்டியார் டைரக்ஷனில் பிரகதி உருவாக்கிய ‘ஸ்ரீவள்ளி’ மகத்தான வெற்றிப்படம். இதில் நகைச்சுவை வேடத்தில் வெளுத்துக் கட்டினார், ராமச்சந்திரன். 1947-ல் ஏவி.மெய்யப்ப செட்டியார் ‘ஏவி.எம்’ ஸ்டூடியோவை தொடங்கினார். அந்த பேனரில் தயாரித்த முதல் படம் ‘நாம் இருவர்.’ டி.ஆர்.மகாலிங்கம் கதாநாயகனாக நடித்த இப்படம், தமிழ்த்திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல். புராணப்படங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த காலக்கட்டத்தில், சமூகப்படங்களுக்கு வழிவகுத்த படம்.

இதில், டி.ஆர்.ராமச்சந்திரனின் நகைச்சுவை நடிப்பு, மிகப்பிரமாதமாக அமைந்தது. காரைக்குடியில் இயங்கி வந்த ஏவி.எம். ஸ்டூடியோ, சென்னைக்கு குடிபெயர்ந்தது. இங்கு ஏவி.எம். தயாரித்த முதல் படம் ‘வாழ்க்கை.’ (1949) இந்த மெகாஹிட் படத்தில்தான் வைஜயந்திமாலா அறிமுகமானார். அவருக்கு ஜோடி டி.ஆர்.ராமச்சந்திரன். நகைச்சுவை கலந்த வேடம். சிறப்பாக நடித்தார். தொடர்ந்து, சம்சாரம், மாப்பிள்ளை, மனிதனும் மிருகமும் முதலிய படங்களில் நடித்த ராமச்சந்திரன், சொந்தத்தில் படக்கம்பெனி தொடங்கினார்.

‘கல்கி’ எழுதிய ‘பொய்மான் கரடு’ என்ற நாவலை ‘பொன் வயல்’ என்ற பெயரில் தயாரித்தார். இந்தப் படத்தில், டி.ஆர்.ராமச்சந்திரனின் ஜோடி அஞ்சலிதேவி. இந்தப் படத்தில்தான் சீர்காழி கோவிந்தராஜன் பின்னணி பாடகராக திரை உலகில் அறிமுகம் ஆனார். இதே சமயத்தில், ஜெமினி தயாரித்த ‘ராஜி, என் கண்மணி’ என்ற படத்தில் கதாநாயகனாக ராமச்சந்திரன் நடித்தார். அவருக்கு ஜோடி ஸ்ரீரஞ்சனி. இது நகைச்சுவை படம் அல்ல; சோகப்படம். தனக்கு சோக நடிப்பும் வரும் என்று ராமச்சந்திரன் நிரூபித்துக் காட்டினார் என்றாலும், படம் ஓடவில்லை.

மீண்டும் சொந்தப்படம் தயாரித்தார், ராமச்சந்திரன். பிரபல எழுத்தாளர் தேவன் எழுதிய ‘கோமதியின் காதலன்’ என்ற கதையை அதே பெயரில் படமாக்கினார். இதில் ராமச்சந்திரனின் ஜோடி சாவித்திரி. படம் சுமாராக ஓடியது. பி.ஆர்.பந்துலு தயாரித்த ‘கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி’ என்ற படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் கதாநாயகனாகவும், சிவாஜிகணேசன் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்தனர். சிவாஜிக்கு ஜோடி பத்மினி. ராமச்சந்திரனுக்கு ஜோடி ராகினி. வெற்றிகரமாக ஓடிய நகைச்சுவைப்படம் இது.

அஞ்சலிதேவி சொந்தமாகத் தயாரித்த ‘அடுத்த வீட்டுப்பெண்’ என்ற படத்தில் ராமச்சந்திரன்தான் கதாநாயகன். எம்.ஜி.ஆருடன் ‘அன்பே வா’ படத்தில் நடித்துள்ளார். டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த படங்கள் 150-க்கு மேல். அதில் 15 படங்களில் கதாநாயகன் வேடம். இவர் திருமணம் 1948-ல் நடந்தது. ஜெயந்தி, வசந்தி என்று 2 மகள்கள். ராமச்சந்திரன் போட்டோ எடுப்பதில் வல்லவர். படங்களில் சொந்தக்குரலில் பாடியவர். பட உலகில் இருந்து ஓய்வு பெற்ற பின், அமெரிக்காவில் மகள் வீட்டில் வசித்து வந்தார். அங்கு முன்றாவது முறையாக ஹார்ட் அட்டாக் வந்ததை அடுத்து ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின்போதே காலமாகிவிட்டார் ராமச்சந்திரன். ஆனால் அவர் தமிழ்ரசிர்களின் இதயத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்தார்.