செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

அ.தி.மு.கவின் புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?

Posted: 2014-09-29 08:04:27
அ.தி.மு.கவின் புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?

அ.தி.மு.கவின் புதிய அரசு என்ன செய்ய வேண்டும்?

தமிழக அரசியல் களத்திலும் பொதுமக்களிடையேயும் எத்தகைய தீர்ப்பு வழங்கப்படுமோ என்ற கேள்வியுடன் 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சட்டவிரோத சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு, மக்கள் பணத்தை சுயநலத்திற்காகக் கூச்சமின்றிச் சூறையாட முனைவோருக்கு ஒரு எச்சரிக்கை மணியாக ஒலித்திருக்கிறது.

இத்தனை ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டது, விசாரணை நடைமுறைகளால் அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்திக்கொண்டு கையாண்ட உத்திகளால்தான் என்பதையும் மக்கள் அறிவார்கள். ‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்ற பழமொழி இருக்கிறது என்றாலும் கூட, இந்த வழக்கைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் நிலவி வந்த ஒரு பதற்றத்திற்கு இப்போதாவது ஒரு முடிவு ஏற்பட்டிருக்கிறதே என்ற எண்ணத்தை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.

நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்துள்ள தீர்ப்பின் மூலம், முதலமைச்சர் பதவியில் இருக்கிறபோதே ஊழல் குற்றச்சாட்டிற்காக சிறைக்கு அனுப்பப்பட்ட தமிழக முதல்வர், நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிற நான்காவது முக்கியஸ்தர் என்ற பெயரைப் பெறுகிறார் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா. ஊழல் விவகாரங்களை எதிர்க்கட்சியினர் சட்ட மன்றத்திற்கு உள்ளே எழுப்பினால் வெளியேற்றம், வெளியே எழுப்பினால் அவதூறு வழக்கு என்பதாகவே அவரது ஆட்சியில் ஜனநாயக உரிமைகளுக்கான இடம் இருந்து வந்திருக்கிறது.

இப்போது நீதிமன்றம், ஊழல் நடந்திருப்பது உண்மைதான் என்று திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிற நிலையில், அவர் சார்பாகப் பொறுப்பேற்கிற புதிய அ.இ.அ.தி.மு.க அரசு யார் மீது என்ன நடவடிக்கை எடுக்கும்? தீர்ப்பு அறிவிக்கப்பட்ட நாளில் மாநிலம் முழுவதும் நடந்துள்ள வன்முறைகள் ஓர் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இரண்டாம் நாள் கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது போலத் தோன்றினாலும், மக்கள் மனங்களில் ஒரு உள்ளார்ந்த கவலை இருக்கவே செய்கிறது.

பலஇடங்களில் காவல்துறையினர் கண் முன்பாகவே ஆளுங்கட்சியினரின் வன்முறைகள் நடந்துள்ளன என்றபோதிலும் யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பது மக்களின் கவலை அர்த்தமுள்ளதுதான் என்று காட்டுகிறது. அந்தக் கவலையைக் களைவதும், வன்முறையைத் திட்டவட்டமாகக் கட்டுப்படுத்துவதும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதும் மாநிலஅரசின் முதற்பெரும் கடமையாக இருக்க வேண்டும்.2016இல் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிற நிலையில், இனியாவது அரசியல் இயக்கங்கள் அரசை விமர்சிப்பதற்கும், மக்களிடம் தங்கள் கண்ணோட்டங்களைக் கொண்டு செல்வதற்கும் தேவையான ஜனநாயகவெளி இங்கே இருக்கிறது என்ற நிலையை உருவாக்குவதும் புதிய அரசின் பொறுப்பாகும்.

அனைத்துக்கும் மேலாக, ஊழல்களுக்கான ஊற்றுக்கண்களை அடைப்பதற்கு இனிமேலாவது மத்திய - மாநில அரசுகள் நேர்மையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்பதை இத்தீர்ப்பு வலியுறுத்துகிறது. நீதிமன்றத் தீர்ப்பை மட்டுமே அரசியலாக்க முடியாது என்றாலும், இதையும் சரியான முறையில் மக்களிடையே கொண்டுசென்று, ஆரோக்கியமான ஜனநாயக அரசியலை நிலை நாட்டுகிற பணியை, மக்களின் பிரச்சினைகளில் உண்மை அக்கறையுள்ள சக்திகள் உறுதியாக மேற்கொள்வார்கள்.