செய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »

செய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »

செய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »

செய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »

செய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்! மேலும் »

போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு

Posted: 2016-09-09 12:19:31
போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு

போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு

இலங்கையின் 25 மாவட்டங்களுடனும் ஒப்பிடுகையில் அதிக மதுபானம் விற்பனை செய்யப்படும் மாவட்டமாக யாழ்ப்பாணம் மாறியிருக்கின்றமை மனவருத்தமளிப்பதாக கூறியிருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதையற்ற தேசம் ஒன்றைக் கட்டியெழுப்ப அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

போதை ஒழிப்பு நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அருகில் உள்ள வளாகத்தில் இடம்பெற்றபோது அங்கு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் வருமானத்தில் 125 முதல் 150 பில்லியன் வரையான நிதி மதுபான வரியினால் கிடைப்பதாகவும் அந்த வருமானம் இல்லாவிட்டால் வரவு - செலவுத் திட்டத்தை வரைய முடியாது என்றும் திறைசேரி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்று கூறிய அவர், இதனை நினைத்து தான் வேதனைப்படுவதாகவும் வெட்கித் தலைகுனிவதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் தேவையற்ற பல விடயங்களுக்காக பலரும் பல ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்துகிறார்கள். தங்கள் சுய லாபங்களுக்காக பாதை போடுவதற்காகவும், வணக்கத் தலங்களுக்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும் போராட்டம் நடாத்துகிறார்கள்.

ஆனால் நான் இவை எல்லாவற்றையும் விட அவசியமானதொன்றுக்காக சிந்திக்கிறேன். எங்களுக்குத் தேவையில்லாத ஒன்றுக்காக யாரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதில்லை. சாராயக்கடைகளை மூட வேண்டும் என்று யாரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதில்லை. போதைப் பொருளை நிறுத்த வேண்டும் என்று யாரும் வீதியில் இறங்கிப் போராடுவதில்லை.

எமது நாட்டில் சாராயம், சிகரெட் மற்றும் போதைப் பொருள்களினால் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போகிறார்கள்.

தேவையில்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் ஏன் இதற்காக ஆர்ப்பாட்டம் நடாத்துவதில்லை என்று உங்கள் முன் நான் கேட்க விரும்புகிறேன். இங்கு மட்டுமல்ல உலகின் எந்தப்பாகத்திலும் இப்படி ஒன்றுக்காக மக்கள் இறங்கிப் போராடுவதைக் காண முடியாது.

உலகத்தில் எந்தப் பகுதியிலும் மக்கள் மூலமாகவோ, அரசியல் வாதிகள் மூலமாகவோ இந்த விடயங்கள் வெளிக் கொண்டுவரப்படுவதில்லை. போதைப் பொருளுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற அமைப்புக்களினால் மாத்திரம் தான் அது சாத்தியமாகிறது.

போதைப் பொருள்கள் எனப்படும் போது சட்டவிரோதமான போதைப் பொருள்களும் உண்டு, சட்ட விரோதமாக விற்கப்படுவனவும் உண்டு.

போதைப் பொருள் விற்பனைக்கு அனுமதி வழங்குவதென்பது மக்களைக் கொல்வதற்காகத் தான். எனவே, போதைப் பொருள் எனும் விடயத்தில் சட்ட ரீதியான அல்லது சட்டவிரோதமான என்று இரண்டு வகை இருக்கக் கூடாது.

எதுவாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் எதிராக நாங்கள் குரல் எழுப்ப வேண்டும். போதைக்கு எதிராக நாங்கள் அணி திரள வேண்டும். மது மற்றும் போதைக்கு எதிராக பொதுக் கருத்தொன்றை நாங்கள் கொண்டுவர வேண்டும்.

அரசியல்வாதிகள், பெற்றோர்கள், பிள்ளைகள், பொதுமக்கள் என்று அனைவருக்கும் இந்தப் பொறுப்பு இருக்கின்றது. உலகில் பல அரசாங்கங்களின் ஆட்சிக்கவிழ்ப்புக்கு போதைப் பொருள் வியாபாரிகள் காரணமாக இருந்திருக்கிறார்கள். இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

எமது நாடு ஒரு தீவாக - கடலால் சூழப்பட்டு இருப்பதனால் எமது நாட்டுக்குள் போதைப் பொருள்கள் ஏதோ ஒரு வகையில் வந்து கொண்டே இருக்கின்றன.

அதேபோல உள்நாட்டிலும் போதைப் பொருள் வியாபாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் தான் 'போதையற்ற நாடு' என்ற போதைக்கெதிரன தேசிய வேலைத்திட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம். போதையில் இருந்து விடுதலையான நாடு என்ற சொல்லைத் தாரக மந்திரமாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.

போதையில் இருந்து விடுதலையான நாடு என்ற இந்தச் சொல்லை நீங்கள் உங்கள் உதட்டிலும் உள்ளத்திலும் வைத்திருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் நான் இன்று மனவருத்தத்துடன் ஒரு விடயத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

இலங்கையிலுள்ள இருபத்தைந்து மாவட்டங்களிலும் அதிகளவிலான மதுபாவனை காரணமாக உயர்ந்தளவு மது வரியைத் திறைசேரிக்குத் தருவது உங்களுடைய யாழ்ப்பாண மாவட்டம் தான் என்பதைக் கவலையுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

யாழ். நகரினுள் மாத்திரம் 69 அல்லது 70 மதுபானக் கடைகள் அனுமதிபெற்று இயங்குகின்றன. கடந்த முறை யாழ்ப்பாணத்துக்கு வந்த போது பாடசாலைப் பிள்ளைகளைச் சந்தித்துக் கலந்துரையாடினேன். அவர்களிடம் நான் கேட்டேன் என்னால் உங்களுக்கு ஆக வேண்டியது என்ன என்று. அவர்கள் தங்கள் தங்கள் பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளைக் கூறினார்கள்.

ஆனால் எல்லோருமாக - ஏகோபித்த குரலில் சொன்ன ஒரு விடயம் தாங்கள் பாடசாலைக்கு வரும் போதும், பாடசாலையை விட்டுப் போகும் போதும் இருக்கின்ற மதுபானக் கடைகள் தங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது தான்.

அநேகருக்குத் தெரிந்திருக்கும், சாராயக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதற்கென்று சில நடைமுறைகள் உண்டு. பாடசாலைகளுக்கும் வணக்கத் தலங்களுக்கும் 500 மீற்றர் தூரத்தினுள் சாராயக் கடைகளை வைப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பாடசாலை மாணவர்களுக்குப் பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதே போல கடல் மார்க்கமாக, சட்ட விரோதமாக எடுத்துவரப்படும் போதைப் பொருள்களினாலும் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இத்தகைய பிரச்சினைகள் என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும், வைத்திய அதிகாரிகளும், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகநல மாதுகளும் இந்தப் பிரச்சினைகளைப் பற்றி நன்கு அறிவார்கள்.

பொலிசாரும் மது வரித் திணைக்கள அதிகாரிகளும் இதனைக் கட்டுப்படுத்துதற்காக அரும் பாடுபடுகிறார்கள். ஆனாலும் இந்த விடயத்தில் நாம் அனைவரும் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்தை நிர்வகிக்கின்ற அத்தனை பேரும் இங்கே கூடி இருக்கிறீர்கள். இங்குள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறேன். உங்களுடைய அலுவலகங்களில் போதைக்கெதிரான அலுவலகம் ஒன்றினை ஆரம்பிக்குமாறு உங்களை வேண்டுகிறேன்.

யாழ்ப்பாணத்தில் கூடுதலாக பியரும், கள்ளும் தான் விற்பனை செய்யப்படுகின்றது. இந்தக் கூட்டத்துக்கு வந்தவர்கள் மதிய போசனத்துக்காக போகும் போது கூட மது அருந்தலாம். இரவு வீட்டுக்குப் போனபின் கூட ஜனாதிபதி இப்படி எல்லாம் சொன்னார். சாராயத்தை விட வேண்டும் தானா என்றெல்லாம் யோசிப்பீர்கள்.

அப்படி யோசித்தால் வீட்டிலுள்ள கண்ணாடியின் முன்னால் நின்று பாருங்கள். என்னைப் போல ஒரு மாடு, எருமை மாடு இருக்க முடியுமா என்று யோசிப்பீர்கள். உங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாதா என்று நான் உங்களைப் பார்த்துக் கேக்கிறேன்.

வயது வந்தவர்கள் இப்படி நடந்தால் சிறியவர்களை நல்ல வழியில் கொண்டு போக முடியுமா? மது மற்றும் போதையினால் நீங்கள் நோயாளி ஆகுவீர்கள். பொருளாதாரத்தில் நொடிந்து பிச்சைக்காரர்கள் ஆகி விடுவீர்கள். சமூகம் உங்களை ஒதுக்கி வைக்கும். சமூகம் உங்களை வெறுக்கும்.

இலங்கையின் வருமானத்தில் 125 முதல் 150 பில்லியன் வரை மதுபான வரியினால் கிடைக்கிறதாம். திறைசேரி அதிகாரிகளின் தகவலின் படி அந்த வருமானம் இல்லாது விட்டால் வரவு - செலவுத் திட்டத்தை வரைய முடியாது என்கிறார்கள். இதனை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். வெட்கித் தலை குனிகிறேன்.

பிள்ளைகளே ! சட்ட விரோதமாக பல வகைப் போதைப் பொருள்கள் இந்த நாட்டுக்குள் வருகின்றன. அவை வௌ;வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. அவற்றை விற்பனை செய்வதற்காக போதைப் பொருள் வியாபாரிகள் பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்துகிறார்கள். போதைப் பொருள் வியாபாரம் நடப்பதை நீங்கள் அறிந்தால் அதனை ஒதுக்க வேண்டும். எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

தன் நலன் பற்றி சிந்திக்கின்ற, தன் குடும்பத்தைப் பற்றி யோசிக்கின்ற, தன் பிள்ளைகளில் அக்கறை கொண்டுள்ள எவரொருவரும் போதைப் பழக்கத்தைப் பழகமாட்டார்கள். இது விடயத்தில் நாங்கள் இன்னும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். எல்லோரும் தங்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.